Breaking News

சுமதி ஆசிரியர் | Sumathy Teacher| பாகம் 2

    



சுமதி ஆசிரியர் பற்றி ஏற்கனவே முதல் பாகத்தில் கூறப்பட்டுள்ளது. அதனை படிக்காமல் தவறவிட்ட நண்பர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொட்டு உள்ளே சென்று படித்து பாருங்கள். 


    இனி சுமதி பற்றி கணவர் தமிழ்மணி ஆகிய நான் நேரடியாக உங்களுடன்...

    சுமதி ஆசிரியர் பணியில் சேர்ந்தது முதல் நாகப்பட்டினம் மாவட்டம்,  கோட்டூர் கடைத் தெருவில் சரவணா மெடிக்கல் வைத்திருக்கும் சரவணன் என்பவர் பழக்கமானார். அவரின் மனைவி சத்யபாமா ஒரு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வாடகைக்கு எங்களை குடியமர்த்தினார். 

    முதலில் சுமதியின் பட்டப்படிப்பு பற்றி கூறுகிறேன். சுமதி ஆசிரியர் பணியில் சேர்ந்ததும் பட்டப்படிப்பு படிக்க விரும்பினாள். ஆதலால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வி மூலம் பி.லிட் தமிழ் (இளங்கலை) படிக்க சேர்ந்தாள். மே 2012 ஆம் ஆண்டு பி.லிட்  இளங்கலை பட்டமும் பெற்றார். 

    மகிழ்ச்சியான இவர்களின் வாழ்க்கையில் 2012 ஆம் ஆண்டு சோதனைகள் ஆரம்பமானது. இந்த காலகட்டத்தில் தான் சுமதியின் கையில் சிறு அரிப்பு ஏற்பட்டது. தோல் வியாதியாக இருக்கலாம் என்பதால் தோல் நோய் சிகிச்சை பெற மருத்துவரிடம் சென்றோம். ஆனாலும் சிகிச்சை பலன் கொடுக்காமல் அடுத்த கையையும் அரிக்கும் நிலை வந்தது. தொடர்ந்து மருத்துவம் பார்த்தபோதும் அரிப்பு நிற்கும், ஆனால் மறுபடியும் வரும். இவ்வாறாகத்தான்  சோதனைகள் ஆரம்பமானது. அந்த அரிப்பு கையிலிருந்து காலுக்கு மாறியது. திருத்துறைப்பூண்டி, திருவாரூர், காரைக்கால் மற்றும் கோயம்புத்தூர் என்று தோல் மருத்துவர்களை தேடி சென்றும் குணமாகவில்லை. பல மருத்துவர்கள் எழுதி கொடுத்த பல மருந்துகள் சாப்பிட்டதன் மூலமாக அதிர்ச்சி ஒன்று கிடைத்தது. ஆம்... சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. சிறுநீர் பிரியவில்லை. அதற்கான தீவிர சிகிச்சைக்காக மீண்டும் பல மருத்துவர்கள் பல மருந்துகள் என்று தொடர்ந்தது.  சில நாள்கள் குணமாகும். மீண்டும் சிறுநீர்  பிரியாமல் மருத்துவரிடம் செல்லும் நிலை வரும். இது ஒரு தொடர்கதையானது. ஆனால் ஒரு அதிசயம். உடலில் அரிப்பு இல்லை. அது எப்படி காணாமல் போனது என்றே தெரியவில்லை. 

    சுமதி சைவ உணவு தான் சாப்பிடுவார். அனைவராலும் சைவம் என்று சொல்லக்கூடிய பால், தயிர், நெய் மற்றும் நெய்யில் செய்த எந்த உணவையும் சாப்பிடமாட்டார். சிறுவயதிலேருந்தே  இப்படித்தான்.  சுமதிக்கு சுகர் இருக்கிறதா?  என்று பரிசோதனை செய்து பார்த்தோம் . ஆனால் சுமதிக்கு சுகர் இல்லை.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் திடிரென ஒரு நாள் உடம்பு முழுவதும் வீங்க ஆரம்பித்து விட்டது. மருத்துவரிடம் சென்றால் சிறுநீர் பிரியாமல் சிறுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு வயிற்றுச் சுவரில் இருந்து சீரியஸ் திரவம்  கழிவு ஏற்பட்டுள்ளது என்றார்கள். புரோட்டின் சத்து குறைவாக உள்ளது. உடலில் சிறுநீர் சூழ்ந்து விட்டது. அதனை ஊசி மூலம் தான் எடுக்க வேண்டும் என்று நீரை ஊசி மூலம் வெளியே எடுத்தனர். சென்னை MMM மருத்துவமனைக்கு சிறுநீரக பரிசோதனை செய்ய அனுப்பினார்கள். திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, சென்னை காளியப்பா மருத்துவமனை மற்றும் இராமச்சந்திரா மருத்துவமனை வரை மேல்சிகிச்சைக்காக செல்லும் நிலை ஏற்பட்டது. அங்கேயும் ஊசி மூலம் தான் சிறுநீரை வெளியே எடுத்தார்களே தவிர நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.  என்ன செய்வது என்று விழிபிதுங்கி நின்றோம்.

    ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் எங்களுக்கு ஒரு கண்டமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஆசிரியர்கள் என்பதால் அரையாண்டு விடுமுறையை இவ்வாறாக மருத்துவமனைக்கு  செல்வதை வழக்கமாக்கிக் கொண்டோம். மே மாத கோடைக்கால விடுமுறைக்கும் மருத்துவமனையே கதி என்று தங்கி இருந்து சிகிச்சைக்காக விடுமுறையை பயன்படுத்திக் கொள்வோம். 

    இவ்வாறான சூழ்நிலையில் சுமதியின் உடல் முழுவதும் வீங்கியதால் நடக்க கூட முடியாத நிலையில் தள்ளப்பட்டார். இந்த நிலையில் தான் செம்போடை மருத்துவர் சொக்கலிங்கம் அவர்களின் பரிந்துரையின் பேரில் 09.02.2013 அன்று திருச்சி மாருதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுநீரக சிறப்பு மருத்துவர் கோபாலகிருஷ்ணன் அவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டது. ஒரேயொரு ஊசி போட வேண்டும், அதனால் அவர் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம், உங்களுக்கு சம்மதமா? என்று என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டு ஊசி போட்டனர். 
சில மணி நேரங்களுக்கு பிறகு...
என்ன ஆச்சரியம்...!
உயிர் பிழைத்துக் கொண்டார்.
சிறுநீர் பிரிந்தது.
உடல் வீக்கம் குறைந்தது.
மனசெல்லாம் நீதானே என்று சந்தோசம் ஏற்பட்டது. அன்று என்னுடைய செல்போனில்  "உன்னையும் என்னையும் பிரிச்சா" என்ற பாடல் ரிங் டோனாக மாறியது . அந்த ரிங் டோன் சுமதிக்கு ரொம்ப பிடித்தது.  சுமதி பூரண குணமடைய  ஒரு வகையில் அந்த ரிங் டோன் காரணமாக அமைந்தது.

    சிறுநீர் தானாக பிரிந்தது. சுமதியின் உடல் வீக்கமும் ஒவ்வொரு நாளும் குறைந்தது. 11 நாள்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தோம்.  மருத்துவரோ தினமும் முட்டை சாப்பிட வேண்டும் என்றார் .  சுமதி சைவம் என்று கூறினோம். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் முட்டை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றும் இல்லையேல் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டுமாவது சாப்பிடுமாறு வற்புறுத்தினார். முட்டையின்  வெள்ளைக் கருவை சிறுக சிறுக வெட்டி சோற்றுடன் கலந்து சாப்பிட பழகிக் கொள்ளுங்கள் என்றார். அதன்படி வேண்டா வெறுப்பாக சாப்பிடத் தொடங்கினார். அப்புறம் பழகிக் கொண்டார். முழுமையாக குணமடைந்து விட்டார்.

     மாதம் ஒருமுறை திருச்சி மாருதி மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. மருந்துகளை விடாமல் சாப்பிட்டு வந்ததால் சிறுநீரக பிரச்சினைகள் முழுவதும் நின்று பூரண குணமடைந்தார்.

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பி.எட் படிக்க விரும்பினாள். எனவே புதுடெல்லி இந்திரா காந்தி தொலைதூர கல்வி மையத்தில் சேர்ந்து பி.எட் படித்தார். டிசம்பர் 2015 ஆம் ஆண்டு பி.எட் ( இளங்கலை கல்வியியல்) பட்டமும் பெற்றார்.

    2015 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் , கோட்டூர், ஏனங்குடி செல்லும் சாலையில் சரவணன் சார் அவர்கள் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார். மேல் மாடியில் இரண்டு வீடுகள் கட்டியிருந்தார். அதில் ஒரு வீட்டில் எங்களைத் தங்க சொல்லி கூடவே எங்களையும் அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். அதுமுதல் அந்த வீட்டில் தான் குடியிருந்து வருகிறோம். 

    இந்த சந்தோசம் மூன்று ஆண்டுகள் தான் நீடித்தது. 2016 ஆம் ஆண்டு மீண்டும் சுமதியின் வாழ்க்கையில் சோதனை ஆரம்பமானது. காலில் வலி ஏற்பட்டது. ரொம்ப நேரம் நிற்க முடியாது. நின்றுக்கொண்டு சமையல் செய்ய முடியாது. இரவு நேரத்தில் வலியால் துடிப்பார். சரியான தூக்கம் இல்லை. இதற்கும் பல மருத்துவர்களின் சிகிச்சை பயன் தரவில்லை. 

    ஆனால் கும்பகோணம் அன்பு மருத்துவமனை  மருத்துவர் இளஞ்சேரலாதன்    (இரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்) என்பவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு நீங்கள் சென்னை வரவேண்டும் என்றும் கூறினார்.  இதயத்திற்கு தானே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வார்கள்... காலுக்குமா செய்வார்கள் என்ற புரிதல் இல்லாமல்,  அறியாமையால் அதனை தவிர்த்து விட்டோம்.

    ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை பிறகு தான் உணர்ந்தோம். அது உங்களுக்கு கீழே படிக்கப் படிக்க தெரியும். 

    திருச்சி மாருதி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கால் பெருவிரல் நகத்தை எடுக்க வேண்டும். அதுதான் காரணம் என்று கூறினார். நகம் வளரும் தன்மை கொண்டது என்ற நம்பிக்கையில் நகம் எடுக்கப்பட்டது. அந்த புண் குணமாக நீண்ட நாள் ஆனது. ஆனால் நகம் வளரவில்லை. கால் வலியும் குணமாகவில்லை. தொடு சிகிச்சை பலன்கொடுக்கும் என்று முயற்சி செய்தும் அதுவும் பலனில்லை. 

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் சுமதியின் வலது குதிகாலில் ஏதோ ஒரு பிசிறு போல தோள் உரிந்து நெருட அதைப் பிடித்து இழுத்து விட்டார். தோளை உரித்ததால் அந்த இடம் சிவந்தது. இரத்தம் கசிந்தது. அன்று வேறு எதுவும் தெரியவில்லை. 

    மறுநாள் அந்த இடம் கடுகு அளவுக்கு புண்ணாக மாறியது. அந்த புண்ணானது நாளடைவில் மிளகு அளவாக, சுண்டைக்காய் அளவாக, 25 பைசா அளவாக , 50 பைசா அளவாக , 1 ரூபாய் அளவுக்கு ஒவ்வொரு நாளும் புண்ணின் அளவு அதிகரித்துக் கொண்டே போனது. கால் வலியும் கூடிக்கொண்டே போனது. 

    நாகப்பட்டினம் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவரிடம் காண்பித்து புண்ணை நாளுக்கு நாள் சுத்தம் செய்து சிகிச்சை மேற்க்கொண்டாலும் புண் ஆறவில்லை. புண் குதிகால் முழுவதும் பரவியது.

     அப்போதுதான் கால் விரல்களை கவனிக்கும் போது வித்தியாசமாக இருந்தது. வலது கால் பெருவிரல் முதல் சுண்டுவிரல் வரை அனைத்து விரல்களும் கருப்பாக மாறியது. அதுமட்டுமல்ல இடது காலில் உள்ள பெருவிரலும் கருப்பாக  மாறியது. கால் விரல்களை அசைக்க முடியவில்லை. உணர்வு இல்லை. கரிக்கட்டைகள் போல இருந்தது. ஒடித்தால் ஒடிந்து விடும் கரிக்குச்சிகள் போல விரல்கள் இருந்தன. 

    அச்சமயத்தில் தான் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனை பற்றி கேள்விப்பட்டு,  15.05.2017 அன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல பரிசோதனைகள் மூலம் இடுப்பில் இருந்து செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள். அதனால் தான் புண் ஆறவில்லை. அதற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அது காலம் கடந்து விட்டது. இனி செய்து பயனில்லை என்று கையை விரித்தனர். அதற்கு ஒரே தீர்வு காலை துண்டித்து எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்கள். 

    தலையில் இடியே விழுவது போல் இருந்தது. அய்யகோ... என்ன செய்வோம் என்று அழுது புலம்பினோம். அப்போது தான் கும்பகோணத்தில் மருத்துவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இனி அழுது என்ன பயன். எல்லாம் முடிந்து விட்டது. கூட இருந்து ஆறுதல் சொல்ல சுமதிக்கு என்னைத் தவிர வேறு யாருமில்லை. 

    இதுவரை எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் சுமதிக்கு துணையாக நான் மட்டுமே செல்வேன். எத்தனை நாள்கள், மாதங்கள் என்றாலும் நாங்கள் இருவர் மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சைகள் பெறுவோம். நீங்கள் மட்டும் என்கூட இருந்தால் போதும் வேறு யாரும் வேண்டாம் என்று சுமதி கூறிவிடுவார். ஆனால் இன்று யாருமே இல்லாத போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. 

பரிசோதனை முடிவுகள்:
1. இடது கால் பெருவிரல் வீக்கம் மற்றும் புற நாடித்துடிப்பு உணரப்படவில்லை என்பதால் அந்த விரலை துண்டித்து விடலாம்.

2. வலது கால் பெருவிரல் , 2 வது மற்றும் 3 வது விரல்களின் அடிப்பகுதியில் தொற்றுள்ள காயம். முன்பாதம் கருப்பு நிறமாற்றம் . குதிகால் பின்புறத்தில் புண் பாதிப்பு. எனவே முன் காலை துண்டித்து விடலாம் என்பதாகும்.

    விதியை மதியால் வெல்லலாம் என்பதை அறியாமல் தவறவிட்ட விதியை அனுபவித்து தானே ஆக வேண்டும். அறுவை சிகிச்சை நாள் குறிக்கப்பட்டது. ஊரில் இருந்து மகன் சுவீந்தர் வரவழைக்கப்பட்டான். சுமதியின் தாய் மற்றும் சுமதியின் சித்தி மகன் கணேசமூர்த்தியும் துணைக்கு வந்தார்.

    கொடுமையிலும் கொடுமை அரங்கேறிய நாள் 01.06.2017 கருப்பு நாளாக மாறியது. அன்று சுமதியின் வலது முழங்காலில் இருந்து  12 செமீ விட்டு கீழே முன்கால் துண்டிக்கப்பட்டது. அதேநேரத்தில் இடது கால் பெருவிரலும் துண்டிக்கப்பட்டது. இந்த இடத்தில் சுமதிக்கு சுகர் இருந்து இருக்குமோ என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால் அதுதான் இல்லை. சுமதிக்கு சுகரே இல்லை. அது உண்மை.

    அறுவை சிகிச்சை முடிந்து சுமதியை வெளியே கொண்டு வந்த போது நான் 
வேதனையின் உச்சத்திற்கே சென்று விட்டேன். சுமதியை கட்டி பிடித்து அழுது புலம்பினேன். சுமதி, உனக்கு கால் இல்லையே என்று கலங்காதே; உனக்கு காலாக நான் இருப்பேன் என்று கதறி அழுதேன். சுமதியின் கண்களில் இருந்து நீர் கசிந்தது. அம்மாவை பார், தம்பி...  என்று மகனிடம் கூற மகனோ செய்வதறியாது கலங்கி நின்றான். அந்த இடத்தில் மூன்று பேருக்கும் ஆறுதலாக இருந்தார் கணேசமூர்த்தி. 

    10.06.2017 அன்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தோம். ஒரு வாரத்தில்  தையல் பிரிக்க மீண்டும் வருமாறு கூறினார்கள். வீட்டில் அவளுக்கு பணிவிடைகள் செய்வது என் முதல் பணியாக இருந்தது. அடுத்து வீட்டில் சமைக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டேன். சமயலறை என் வசமானது. சுமதியின் துணைக்கு அவளது தாயாரை இருக்க சொல்லிவிட்டு நான் பள்ளிக்கு சென்று வந்தேன். சுமதி மருத்துவ விடுப்பில் இருந்தார்.

    ஒரு வாரத்திற்கு பிறகு  இடது காலின் விரல்கள் அனைத்தும் கருப்பாக மாறியது. மேலும் பாதத்தின் முன்பகுதியும் கருமை நிறமானது. கோயம்புத்தூர் தொலைவு என்பதால்  தஞ்சாவூர் KG மருத்துவமனையின் மருத்துவர் மருதுதுரை அவர்களின் அழைப்பின் பேரில் அந்த மருத்துவமனையில் 23.06.2017 அன்று சுமதி அனுமதிக்கப்பட்டார் . அங்கு தையல் பிரிக்கப்பட்டது. இடது காலில் பிரச்சினை ஏற்பட்டு புண் உண்டாகிவிட்டது. அந்த காலை காப்பற்ற வேண்டும் என்றால் சென்னை சவீதா மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

    அதன்படி 10.07.2017 அன்று சிகிச்சைக்காக சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள் சாப்பிடுங்கள் மீண்டும் 20 நாள்கள் கழித்து வாருங்கள் என்று அனுப்பி விட்டார்கள். 

   17.08.2017 அன்று மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மீண்டும் கொடுமை அரங்கேறியது. அதாவது இரத்த நாளப் புண் ஏற்பட்டு இருக்கிறது. ஆதலால் இடது தொடையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் இடது கால் முன்பாதம் கருப்பாக இருப்பதாலும் புண் ஆறவில்லை என்பதாலும் அதை துண்டித்து விடலாம் என்றும் பரிந்துரைத்தார்கள். 

    முன்பாதம் மட்டுமே நீக்க வேண்டும் என்று கூறியதால் முழுகாலும் தப்பித்ததே என்று அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தோம்.  21.08.2017 அன்று இடது காலின் முன்பாதம் துண்டிக்கப்பட்டது. 

    இவ்வளவுக்கும் மருத்துவமனையில் சுமதிக்கு துணையாக நான் மட்டுமே இருந்தேன். வலது காலும் இல்லை. இடது காலும் அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் கிடந்தார். சுமதியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும். அவருக்கு ஒரே துணை நான் மட்டுமே இருந்தேன். சுமதியின் அனைத்து தேவைகளையும் பார்த்து பார்த்து செய்தேன். உடல் தான் ரணமாகி ஊனமாகிவிட்டது. மனம் ரணமாகிவிட கூடாது என்று அவள் அருகிலேயே இருந்தேன். அவளின் கண் பார்வையில் இருந்து நான் அகலவில்லை. அவளுக்கு எல்லாமுமே நானாக இருந்தேன். ஒரு பெண்ணிற்கு பெண் உதவியாக இருந்தால் எப்படி இருக்கும். அதுபோல அவளுக்கு தாயாக தாயுமானவனாக மாறிவிட்டேன். என்னுடைய கவனிப்பும் பராமரிப்பும் அவளுடைய வலிகள் எல்லாம் காணாமல் போனது. அவளின் இதயத்தில் இடம் பிடித்தேன். எனக்கு எல்லாமே அவர் தான். எனக்கு கிடைத்த தெய்வம் என்று எல்லோரிடமும் கூறும் அளவுக்கு பேரு பெற்றேன். 

    மருத்துவமனையில் இருந்து விடுவித்து வீட்டிற்கு வந்தோம். சுமதிக்கு இப்போது கால்வலி இல்லை. புண் ஆறிவிட்டது. பூரணமாக குணமாகிவிட்டாள். 
கால்களை இழந்தது சுமதிக்கு பேரிழப்புதான். இவ்வளவு வலிகளையும் ரணங்களையும் எப்படி தான் தாங்கி கொண்டாளோ... என்று வியந்தேன். அந்த அளவிற்கு மனவலிமை உடையவராக இருந்தாள். 

 நான் உயிரோடு இருப்பதே என் மகனை நினைத்துதான் இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கி கொண்டேன் என்று கூறுவாள். மகனின் திருமண மேடையில் நான் அவன் பக்கத்தில் அம்மாவாக நிற்க வேண்டுமே என்று கூறுவாள். 

    2018 ஆம் ஆண்டு சுமதிக்கு செயற்கை முறையில் கால்களை பொருத்த எண்ணினோம். திருச்சி ABC மருத்துவமனைக்கு எதிரேயுள்ள OTTOBACK செண்டரை அணுகினோம். வலது கால் முழங்காலில் இருந்து பொருந்தக் கூடிய வகையில் செயற்கை காலும், இடது காலில் பாதம் மட்டும் பொருந்தக்கூடிய வகையில் ஒரு ஷூ போன்ற வடிவில் அமைந்த ஒரு செயற்கை ஷூவும் தயார் செய்து கொடுத்தார்கள். பயிற்சிகளும் வழங்கப்பட்டது. ஓரளவுக்கு தனியாக நடக்க முடிந்தது. அவரது உடல் எடை கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பிடிமானத்திற்கு கூடவே ஒரு நபரின் உதவி தேவைப்பட்டது. ஆனால் வீட்டில் இருக்கும் போது அதனை கழற்றி வைத்துவிட்டு தரையில் அமர்ந்து கொள்வார். தரையில் கைகளை ஊன்றிக் கொண்டு நகர்ந்து செல்வார். தனியாக குளியலறை செல்வார். குளிப்பார். தன்னுடைய காலகடன்களை தானே செய்ய பழகிக் கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கடமைகளை தானே செய்ய பழகிக் கொண்டாள். மாதம் ஒருமுறை சென்னை சவீதா மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய சென்று வந்தோம். 

    இவ்வளவு தூரம் நீங்கள் சென்னைக்கு வர வேண்டாம். இனி தஞ்சாவூர் வாத நோய் நிபுணர் மருத்துவர் ஜே.ஆர்.எஸ். விஜய்பாபு அவர்களை பாருங்கள் என்று அனுப்பி வைத்தனர். அதன்படி 2018 ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூர் அன்பு கிளினிக் சென்று மருத்துவம் பார்க்க தொடங்கினோம். இப்போதும் மாதம் ஒருமுறை தஞ்சாவூர் பயணம் தொடர்ந்தது. 

    நன்றாக குணமடைந்து விட்டதால் இனி நீங்கள் சமைக்க வேண்டாம். நானே சமைக்கிறேன். கேஸ் அடுப்பை கீழே இறக்கி வையுங்கள் என்றார். அதன்படி அடுப்பு கீழே இறக்கி அவளுக்கு வசதியாக வைக்கப்பட்டது. சமையலறை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் அவள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் வைக்கப்பட்டது. நான் பாத்திரங்கள் மட்டும் கழுவி வந்தேன். நாளடைவில் அதனையும் நானே பார்த்துக் கொள்கிறேன். ஒரு வாளியில் தண்ணீரும்,  கழுவி ஊற்ற ஒரு காலியான வாளியும் வையுங்கள் என்றார். இப்படியாக அனைத்து வேலைகளையும் தானே செய்ய வேண்டும் என்று செய்து காட்டினார். அவளின் தன்னம்பிக்கை என்னை கட்டிப் போட்டது. 

   பள்ளிக்கு அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு இருந்தவர். இனி பள்ளிக்கு தொடர்ந்து செல்ல முடியும் என்று உறுதியாக நம்பினார். பள்ளிக்கு சென்று குழந்தைகளின் முகங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அன்று முதல் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். 

       மாடியில் இருந்து கீழே தானாகவே கைப்பிடி சுவரைப் பிடித்துக் கொண்டு படியில் இறங்குவார். படிக்குப் பக்கத்திலேயே என்னுடைய டூ வீலரை நிறுத்திக் கொள்வேன். ஒரு நாற்காலியின் உதவியோடு பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொள்வார். சுமதியின் பள்ளி அரை கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது. தினமும் இதுபோன்று தான் சுமதியை பள்ளிக்கு கொண்டு சென்றேன். பள்ளியிலும் சுமதியின் வகுப்பறை வாசற்படியில் நிறுத்தி சுமதியை இறக்கி விடுவேன்.  மாணவ மாணவிகள் ஓடி வந்து சுமதிக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். சுமதியின் முகம் பிரகாசமாகும். சுமதியின் மேல் அக்கறை கொண்ட பிள்ளைகளை நினைத்து மகிழ்வேன். 

    அதன்பிறகு அந்த பள்ளியில் இருந்து  ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள என்னுடைய பள்ளிக்கு சென்று விடுவேன். மீண்டும் மாலையில் பள்ளி வேலை முடிந்து சுமதியின் பள்ளிக்கு செல்வேன். ஆசிரியர்களும் மாணவிகளும் சுமதியை சூழ்ந்துக்கொண்டு என் வருகைக்காக காத்திருப்பார்கள். மாணவிகளுக்கு நன்றி கூறிவிட்டு சுமதியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வேன். சுமதியின் பள்ளி நாள்கள் இவ்வாறாக அழகாக சென்றுக் கொண்டிருந்தது. 

இந்த காலகட்டம் தான் கொரோனா காலம். அதனால் சுமதியை கொரோனா தொற்று பாதிக்காத வகையில் கவனமாகப் பார்த்துக் கொண்டேன். நல்லவேளையாக கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொண்டார்.

    சுமதி ஆசிரியர் பி.லிட்., பி.எட்., படித்து இருந்தாலும் முதுகலை பட்டம் பயில வேண்டும் என்று எண்ணினார். அதனால் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் படிக்க விண்ணப்பித்தார். 2021 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டமும் பெற்றார். 

    ப. சுமதி, M.A., B.Ed., என்று தன்னுடைய பெயருக்கு பக்கத்தில் போட வேண்டும் என்ற சுமதியின் கனவு நிறைவேறியது. தன் மகன் திருமண அழைப்பிதழில் இவ்வாறு இடம்பற வேண்டும் என்று ஆசைப்பட்டார். இல்லையேல் அதற்குமுன் நடக்க இருக்கும் தன் நாத்தனார் ( என் தங்கை வனஜா) வீட்டு திருமண அழைப்பிதழிலாவது இடம்பெறுமா? என்று ஆசைப்பட்டார். சுமதியின் கனவு நிறைவேறியதா? விரைவில் தெரியும்...


கருத்துகள் இல்லை

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு எனது நன்றி.